×

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து: உயிர் பிழைக்க கீழே குதித்த பயணிகள்

சென்னை: வியாசர்பாடி அருகே சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பெட்டிகளில் இருந்து உயிர் பிழைப்பதற்காக கீழே குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் ரயில் இயங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பை செல்லும் லோக் மானியக் திலக் ரயில் நேற்று மாலை 6.30 மணி அளவில் பயணிகளுடன் புறப்பட்டது. ரயில் வியாசர்பாடி -பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தை கடந்து, வியாசர்பாடி ராமலிங்கா கோயில் அருகே சென்றது. அப்போது இன்ஜின் பெட்டியுடன் ஏசி பெட்டியை இணைக்கும் பகுதியில் திடீரென கரும்புகை வெளிவந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.

கரும்புகை வெளிவருவதைக் கண்ட பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக வண்டி நிறுத்தப்பட்டதும் ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். பீதியடைந்த பலர் உயிர் பிழைத்தால் போதும் என தண்டவாளத்தில் குதித்தனர். சிறிது நேரத்தில் தீயின் அளவு அதிகரித்து அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்து ஏற்பட்ட இன்ஜின் பெட்டியில் இருந்து அடுத்துள்ள 2 பெட்டிகளில் இருந்த பயணிகளும் அவசர அவசரமாக தங்களது உடமைகளை தூக்கிக்கொண்டு ஓடத் தொடங்கினர்.

அப்போது பெரம்பூர் பகுதியில் இருந்து மின்சார ரயில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. பயணிகள் அலறியடித்து ஓடுவதைக் கண்டு, மின்சார ரயில் தீப்பற்றி எரிந்த ரயிலின் பக்கத்தில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. உடனே பயணிகள் மின்சார ரயிலில் ஏறத் தொடங்கினர். முதல் 2 பெட்டியில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கியதும் மற்ற பயணிகள், சத்தம் கேட்டு ரயில் முழுவதும் எரிகிறது என்று எண்ணிக்கொண்டு அவரவர் உடமைகளை எடுத்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கி, பாதி பேர் தண்டவாளத்தில் ஓடினர். பாதிபேர் அருகில் இருந்த மின்சார ரயிலில் ஏறத் தொடங்கினர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு ரயில் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு சரி செய்யப்பட்டது. இதனால் கரும்புகை குறைந்து பழுது முழுவதும் சரி செய்யப்பட்டது. ரயில் பெட்டியில் இருந்த பழுது சரி செய்யப்பட்டதை ரயில்வே பாதுகாப்பு படையினர் அருகில் இருந்த ரயில் பயணிகளுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து அவர்கள் ஒருவித அச்ச உணர்வுடன் மீண்டும் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறினர்.

அதன் பிறகு சுமார் இரவு 7.22 மணியளவில் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. அதிர்ஷ்டவசமாக எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் அரை மணி நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. ரயில் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து 32 நிமிடங்களில் சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவை எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தை தொடர்ந்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஒருவித அச்ச உணர்வுடன் செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்ட்ரலுக்கு வந்த ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு அங்கிருந்து சுத்தம் செய்வதற்காக பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ரயில் தடம் புரண்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதன் பிறகு மின்சார ரயில் ஒன்றும் பேசின் பிரிட்ஜ் பகுதியில் தடம் புரண்டது. இந்த 2 சம்பவங்களும் ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மும்பைக்குச் சென்று கொண்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு அதில் இருந்த பயணிகள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடி தங்களது உடமைகளை எடுத்துச் சென்ற அந்த அரை மணி நேரம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து: உயிர் பிழைக்க கீழே குதித்த பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Chennai Central ,Mumbai ,Chennai ,Vyasarpadi ,
× RELATED சென்னை – மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாக புறப்படும்